top of page

திருச்சியில் மாமியார் மருமகள் கிணறு

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கு திருச்சி மாநகராட்சி அந்த திருச்சியில ஸ்வஸ்தி வடிவத்தில ஒரு கிணறு இருக்குனு நண்பர் சொன்னாரு சரி அந்த இடத்தை வீடியோ எடுக்கலாம்னு நம்ம தமிழ் நேவிகேசன் குழு கிளம்பினோம். இந்த இடம் சரியாக திருச்சியில எங்க இருக்குனா திருவெள்ளறை அப்படிங்கிற அழகிய கிராமத்தில புண்டரிகாச பெருமாள் கோவில் பின்பக்கம் அமைந்து இருக்கு.


திருச்சியில் இருந்து சரியாக 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கு. இந்த கிணறு 1200 வருட பழமையான கிணறு. நாங்க அந்த இடத்திற்கு வந்தடைந்தோம் அங்க தொல்லியல் துறையோட அறிவிப்பு பலகைகள் நம்மளை வரவேற்றது. கிணற்றை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைத்திருந்தார்கள்.

கிணற்றை சுற்றியும் செடிகள் நட்டு ரொம்பவே அழகா பராமரித்து வருகிறார்கள் தொல்லியல் துறை.


இந்த கிணற்றை சுற்றி 3 கல்வெட்டுகள் அமைந்திருக்கு. நம்ம குழுவோட முருகன் என்பவரும் வந்திருந்தாரு.

அவரு யுடியுப்ல தகழி அப்படினு ஒரு சேனல் வைத்திருக்கிறாரு. அவர் கல்வெட்டுகளை நுணுக்கமாக படிக்ககூடியவர். 3 கல்வெட்டுகளையும் நாங்க படித்தோம், அதே நேரத்தில எங்கள் குழு படப்பிடிப்பிற்கு தயாராகிட்டுருந்தாங்க. அவர் ஒவ்வொரு கல்வெட்டுகளையும் விளக்க ஆரம்பித்தார்.


முதல் கல்வெட்டு


ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்ரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவது எடுத்துக்கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் அலம்பாக்க விஷையநல்லுளான்

தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப் பெருங்கிணறு இதன் பியர் மார்ப்பிடுங்குப்பெருங்கிணறென்பது இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழு நூற்றுவரோம்


இந்த முதல் கல்வெட்டு இந்த கிணற்றை யாரு கட்டினார்கள், கிணற்றின் பெயர் என்ன அப்படிங்கிறத சொல்லுது அதாவது தந்திவர்மரின் ஆட்சி காலத்தில் நான்காவது ஆண்டு கிணறு வெட்ட தொடங்கி ஐந்தாவது ஆட்சி ஆண்டில் நிறைவு பெற்றது என்றும் இதை கட்டியவர் ஆலம்பாக்கத்தை சேர்ந்த விசெய நல்லூழான் அவர்களுடைய தம்பி கம்பன் அரையன் என்றும் இந்த கிணற்றை பராமரிப்பதற்கு மூவாயிரத்து முன்னூற்றுவர் என்ற வணிக குழுவிடம் ஒப்படைத்ததாக இந்த முதல் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாவது கல்வெட்டு தமிழ் செய்யுளை போல் வருகிறது என்று முருகன் விளக்க ஆரம்பித்தார்,


இந்த கல்வெட்டு மனித வாழ்க்கையின் நிலையாமையையும் வாழ்க்கை தத்துவத்தையும் விளக்குகிறது,

ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்

தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன்

உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்


இந்த முதல் வரி நாம் பார்க்கின்ற இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, இது மாய உலகம் என்றும் அதன் மேல் ஆசை வைக்காதீர்கள் என்று கூறுகிறது. இரண்டாவது வரி மனிதர்களின் வாழ்க்கை நிலையானது இல்லை என்றும் மூன்றாவது வரி முதுமை காலத்தில் நல்லது செய்து விடலாம் என்று நினைத்து விடாதீர்கள் ஏனென்றால் முடிவு எப்பொழுது வரும் என்று தெரியாது என்றும் நான்காவது வரி உங்களுக்கு போக மீதம் இருப்பதை அடுத்தவருக்கு கொடுத்து உதவுங்கள் என்றும் கூறுகிறது.



மூன்றாவது கல்வெட்டு கிணற்றின் கிழக்கு திசை நோக்கி இருக்கிறது. இந்த கல்வெட்டு போசல மன்னர் வீர ராமநாத தேவருடைய 25வது ஆட்சி காலத்தில் இந்த கிணறு புனரமைக்கபட்டதை சொல்கிறது. இதை புனரமைக்க குடந்தை வாணிகன் (அவருடைய பெயர் சிதைந்துவிட்டது) இங்குள்ள நகரத்தாரிடம் பணம் பெற்று இந்த கிணற்றை புனரமைத்தார் என்று கூறுகிறது. இந்த கல்வெட்டில் ஒரு அழகிய தமிழ் சொல் வருகிறது அது உய்ய நெறி காட்டினான். உய்ய நெறி என்பது பிழைக்கும் வழி காட்டியவன் என்பது பொருள் அதாவது பணம் யாரு வேண்டுமானாலும் தரலாம் ஆனால் இதற்கு இது தான் பிழைக்ககூடிய வழி என்று காட்டுவது.


இந்த மூன்று கல்வெட்டுகளும் மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கிணற்றின் நான்கு திசைகளிலும் நான்கு வாசல் போன்று படிக்கட்டுகள் அமைத்து அழகாக வெட்டப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டுகளை படித்து முடித்த பிறகு நான் அந்த கிணற்றுக்குள் இறங்கினேன்.


உள்ளே செல்ல செல்ல எக்கோ அடிக்க ஆரம்பித்தது. அந்த படிக்கட்டுகளில் கிணற்றின் அடியில் இருந்து மேல் செல்லும் படிக்கட்டுகளில் தமிழ் எண் முறை எழுதப்பட்டு இருக்கிறது ஒன்பது வரை தான் எண்கள் இருக்கிறது அதற்கு மேல் கால மாற்றத்தால் எண்கள் அழிந்து விட்டது. கிணற்றின் உள்ளே பார்க்க வரும் மக்கள் அவர்களுடைய பெயர்களை எழுதி வைக்கிறார்கள் அது மிகவும் வருத்தமான ஒரு விடையம். தொல்லியல் துறை சிமெண்ட் பூசி செம்மைபடுத்த முயற்சித்திருக்கிறார்கள்.


ஓவ்வொரு படிக்கட்டு வாசல்களிலும் மூன்று தூண்கள் வீதம் நான்கு திசைகளுக்கும் இருக்கிறது. எடுத்துக்காட்டக- தெற்கு திசையில் முதல் தூணில் பிள்ளையார் உடைய சிற்பமும், இரண்டாவது தூணில் மான் சிங்கம் நடுவே கொற்றவை மூன்றாவது தூணில் சப்த மாதர்கள் செதுக்கப்பட்டுள்ளது.


இந்த கிணறு ஸ்வஸ்தி வடிவ குறியீட்டு வடிவில் பல்லவர்கள் காலத்தில் 1200 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டிருக்கிறது, இந்த ஸ்வஸ்தி குறியீடு சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இருக்கிறது. இந்த கிணற்றின் இன்னொரு பெயர் மாமியார் மருமகள் கிணறு என்றும் கூறுவார்கள் ஏனென்றால் நான் முன்பே சொன்னேன் நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் இருக்கிறது என்று, ஆதலால் ஒரு திசையில் அமர்ந்து குளித்தால் மறு திசையில் குளிப்பவர்களுக்கு எதிரே யார் குளிக்கிறார்கள் என்று தெரியாது. அதனால் தான் இந்த கிணற்றின் பெயர் மாமியார் மருமகள் கிணறு என்று சொல்வார்கள்.


இந்த கிணற்றில் நாங்க போறப்போ தண்ணீர் இல்ல, கிணற்றிற்கு வெளிய இங்கு அருகில் தொல்பொருள் அகழாய்வில் கிடைத்த சிலைகளும் லிங்கமும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த லிங்கம் நாம் சாலுவன் குப்பம் புலி குகையில் இருக்கும் லிங்கத்தை போலவே இருக்கிறது. இரண்டுமே பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது தான்.




இந்த கிணறு தமிழகத்திலேயே மிகப்பெரிய தனித்துவத்தை கொண்டுள்ளது. குடும்பத்துடன் வருபவர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் ஏனெனில் கிணறு 50 அடி ஆழம் அதனால் கவனம் தேவை, வருபவர்கள் பெயர்கள் எழுதுவதோ கிருக்குவதோ செய்யாதீர்கள் ஏனெனில் 1200 வருட பொக்கிஷம் உங்களால் அழிய வேண்டாமே


திருச்சியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் திருச்சியில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இந்த திருவெள்ளறை மாமியார் மருமகள் கிணறு (எ) ஸ்வஸ்தி கிணறு மற்றும் புண்டரிகாச பெருமாள் கோவில், இதே போல தனித்தவமான இடத்தை பற்றிய அடுத்த பதிவில் பார்க்கலாம்….


134 views
bottom of page